சிங்கப்பூரின் சன்சீப் குழுமத்தின் தலைமையிலான நிறுவனங்கள், இந்தோனேசியாவின் அண்டை நாடான ரியாவ் தீவுகளில், நகர-மாநிலத்திற்கு மின்சாரம் வழங்குவதற்காக சூரிய சக்தி அமைப்புகளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக சன்சீப் நிறுவனம் இன்று செவ்வாய்கிழமை (அக்டோபர் 26) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அமைப்புகள் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்த அதிகபட்சமாக 7 ஜிகாவாட் (GWp) திறனைக் கொண்டிருக்கும் என்று சன்சீப் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் தெற்கே உள்ள ரியாவ் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியான படாம் தீவில் முன்னர் அறிவிக்கப்பட்ட 2.2 GWp மிதக்கும் சூரியப் பண்ணையும் இதில் அடங்கும். இந்த திட்டம் சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவின் பசுமை ஆற்றல் இலக்குகளை அடைய உதவும் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய எல்லை தாண்டிய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சுத்தமான எரிசக்தி திட்டங்களில் ஒன்றாக இது இருக்கும் என்று சன்சீப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலம், சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவிற்கு 1 ஜிகாவாட் (GW) இடைவிடாத குறைந்த கார்பன் நச்சுக்கள் இல்லாத ஆற்றலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அந்த அறிக்கை கூறியது. முன்மொழியப்பட்ட இந்த அறிக்கையில் புதிய நீர்மூழ்கி மின் கேபிள் மூலம் சிங்கப்பூருக்கு பசுமை ஆற்றல் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 2035ம் ஆண்டிற்குள் 4 ஜிகாவாட் குறைந்த கார்பன் மின்சார இறக்குமதி இலக்கில் 20 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை பூர்த்தி செய்வதை இந்த கூட்டமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது, இது விநியோகத்தைப் பன்முகப்படுத்தவும் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் நேற்று திங்களன்று அறிவித்தது.