சிங்கப்பூரில் இருந்து வெளியேறி விட்டால் போதும் என்ற மனநிலையில் தவித்து வருகின்றனர் வெளிநாட்டு தொழிலாளர்கள். அந்த அளவுக்கு நிலைமை தற்போது ஒன்றும் சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கின்றது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக வாழ்வாதாரம் இழந்த லட்சக்கணக்கான மக்களில், சிங்கப்பூரில் பணியாற்றி வரும் வெளிநாட்டு ஊழியர்கள் மிக முக்கியமானவர்கள்.
கிட்டத்தட்ட 13 மாதங்களாக பலரும் வேலைக்கு செல்ல முடியாமல் சிங்கப்பூரில் தவித்து வருகின்றனர். குறிப்பாக, தொற்று அதிகம் ஏற்பட்ட Dormitory-ல் தங்கியிருக்கும் ஊழியர்களின் நிலை படு மோசம்.
ஒரு அறையில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும், அந்த அறையில் இருக்கும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதனால், கூட தங்கியிருப்பவர்களும் வேலைக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது.
இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சிலர் வெளிநாட்டு தொழிலாளர்கள், எப்படியாவது ஊர் திரும்பினால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். ஆனால், பலரும் வட்டிக்கு கடன் வாங்கி சிங்கப்பூர் வந்து பணியாற்றுவதால், அவர்கள் சிங்கப்பூரில் தொடர்ந்து பணியாற்றவும் முடியாமல், ஊருக்கும் திரும்ப முடியாமல் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர்.
எனினும் சிலர், ‘ஊருக்கு சென்று கூலி வேலை செய்தாவது, கடனை அடைத்துக் கொள்ளலாம்; ஆனால், சிங்கப்பூரில் இருந்து வெளியேறினால் போதும் என்று முடிவெடுத்து, டிக்கெட் போடச் சொல்லி டிக்கெட் புக்கிங் நிறுவனங்களை அணுகி வருகின்றனர்.
எனினும், இந்த கொரோனா காலத்தை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்பதில் சிங்கப்பூர் அரசு மிகத் தீவிரமாக உள்ளது. மிக விரைவில் இந்த நிலை மாறும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்து வருகிறது. ஆனால், தொற்றால் பாதிக்கப்பட்ட சில Dormitory-களில் தங்கியிருக்கும் பலரும் வேலைக்கு செல்ல முடியாததால், வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்ற விடை தெரியாத கேள்வியின் பதிலுக்காக காத்திருக்கின்றனர். பலரும், இப்படியே தங்களின் நிலை தொடர்ந்தால், கடனுக்கு வட்டி கூட செலுத்த முடியாது என்று வேதனை பகிர்கின்றனர்.
இருப்பினும், தமிழ் சாகா வாயிலாக நமது சிங்கப்பூர் தமிழ் அன்பர்களிடம் வைக்கப்படும் வேண்டுகோள் என்பது, துபாய் அல்லது மற்ற நாடுகள் வழியே தமிழகம் சென்றுவிடலாம் என்று நினைத்து அதிக கட்டணம் செலுத்தி டிக்கெட் போட வேண்டாம் என்பதே. இதனால், அதிக அளவில் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இப்போதைக்கு ஊர் சென்றால் போதும் என்ற ஒரு வேகத்தில் பணம் செலுத்தி டிக்கெட் போட்டு சென்றாலும், அது மேலும் மன உளைச்சலை மட்டுமே ஏற்படுத்தும். அந்த இயற்கையின் மீதும், சிங்கப்பூர் அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். பனிமலை எப்படி சூரியன் வெளிப்பட்டால் அதன் வெப்பம் தாங்காமல், உருகி காணாமல் போகுமோ, அது போல விரைவில் இந்த கொரோனா காலம் காலாவதியாகும். அதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் “நம்பிக்கை” மட்டுமே. எக்காரணத்தைக் கொண்டு அதனை இழந்துவிடாதீர்கள். நிச்சயம் நமக்கான சூரிய உதிக்கும். அதுவரை காத்திருப்போம்!