சிங்கப்பூரில் கோவிட் -19 சமூகப் பொறுப்பு’ என்ற ஒரு விஷயமாக மக்கள் தொடர்ந்து சுய பரிசோதனை செய்ய கடுமையாக ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
தடுப்பூசி போடப்பட்ட தனிநபர்கள் உட்பட அனைவரும் “சமூகப் பொறுப்பு” என்ற அடிப்படையில் ஆன்டிஜென் விரைவு சோதனை (ART) கருவிகளுடன் தொடர்ந்து சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கோவிட் -19 பல அமைச்சக பணிக்குழுவின் இணைத் தலைவர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அவர்கள் அதிக ஆபத்துள்ள செயல்களில் பங்கேற்றாலோ அல்லது பெரிய அளவிலான நிகழ்வுகளில் கலந்து கொண்டாலோ இந்த சோதனை தனிமைபடுத்த மற்றவர் பாதுகாப்பிற்கு உதவும் என தெரிவிக்கப்பட்டது.
“நாங்கள் ஏற்கனவே மிக அதிகமான தடுப்பூசியை எட்டியுள்ளோம், தடுப்பூசியின் அடிப்படையில் நாங்கள் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம், நாம் இப்போது ஒரு சோதனை நாடாக இருக்க வேண்டும், இங்கு சோதனை ஒரு வாழ்க்கை முறையாக மாறும்” என்று திரு வோங் கூறியுள்ளார்.
“வழக்கமான சோதனை, அதிக ஆபத்துள்ள அமைப்புகளில் பணிபுரியும் நபர்களுக்கு மட்டும் இருக்கக்கூடாது. உண்மையில், நீங்கள் தடுப்பூசி போடப்பட்டாலும் இல்லாவிட்டாலும், ஆன்டிஜென் விரைவு சோதனை கருவிகளுடன் தொடர்ந்து சுய பரிசோதனை செய்ய வேண்டும். அனைவரையும் நாங்கள் கடுமையாக ஊக்குவிக்க விரும்புகிறோம். இது சமூகப் பொறுப்புள்ள விஷயம்.” என தெரிவித்தார்.
இதனால்தான் ஒவ்வொரு வீட்டிற்கும் ஏஆர்டி டெஸ்ட் கிட்களை விநியோகிக்க அரசு முடிவு செய்தது என்றும் அவர் கூறினார்.
ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 27 வரை வீடுகளுக்கு இந்த கருவிகள் வழங்கப்படுகின்றன என்று சுகாதார அமைச்சகம் (MOH) தனி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பெரிய சில்லறை விற்பனையாளர்களிடம் பரவலாகக் கிடைக்கும் ஆறு ART சுய-சோதனை கருவிகளுக்கு சுகாதார அறிவியல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
விற்பனைக்கான புதிய கருவிகளை அரசாங்கம் “தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது” என்றும் இது போன்ற சுய-சோதனை கருவிகளை இன்னும் எளிதாகக் கிடைக்கச் வழிவகை செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.