ஒரு நாட்டை வலுவாக கட்டமைக்க அந்த நாடு அடிப்படையில இருந்து வளர வேண்டியது அவசியம். அந்த அடிப்படையைக் கட்டமைக்க உதவும் மிகப்பெரிய சக்தி தான் தொழிலாளர்கள். அந்த தொழிலாளர்கள் நலனுக்காக அனைத்து நாட்டு அரசாங்கங்களும் பல விதிகளையும், சட்டங்களையும் அமல்படுத்தி இருப்பாங்க.
அதுல முக்கியமான ஒன்னு தான் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சட்டங்கள். மற்ற நாடுகளில் உள்ளது போல சிங்கப்பூரில் தொழிலாளர்களுடைய பாதுகாப்புக்கும் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும் அரசாங்கம் பல சட்டங்களை வகுத்து இருக்காங்க.
அதனுடைய கட்டமாகத் தான் OSH-ன் (Occupational Safety & Health) புதிய சட்டங்கள் அமலுக்கு வர இருக்கு. 2006-ஆம் வருடம் கட்டமைக்கப்பட்ட OSH-ன் சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, புதிய மற்றும் திருத்தப்பட்ட சட்டங்கள் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதியன்று சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்பொழுது வரை அது அமலுக்கு வராமல் இருந்தது. இந்த சட்டங்கள் வருகிற ஜூன் 1 முதல் அமல்படுத்தப்படும் என்று சிங்கப்பூர் மனிதவள மேம்பாட்டு அமைச்சரான ஸ்டீவன் சிம் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்க்கான ஒப்புதல் அவர் அமைச்சராக பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் கையெழுத்திடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி 5-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள தொழில் நிறுவனங்களில், ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்றவற்றை உறுதி செய்ய ஒரு ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டும்.
இதற்கு முன் அரசாங்கத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் செயல்பட்டு வந்தது. தற்பொழுது அது அந்தந்த நிறுவங்களுக்குளேயே ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சரி! OSH என்றால் என்ன? இதற்கு முன் இது எப்படி இருந்தது? யாருக்கெல்லாம் இது பயனுள்ளதாக இருக்கும்? எந்தெந்த நிறுவனங்களுக்கு இது பொருந்தும்? என்பதை பற்றி சற்று அறிந்து கொள்வோம்!
OSH – Occupational Safety & Health ( தொழில் சார்ந்த பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய அமைச்சகம்)
OSH என்பது பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர்களின் நலனுக்காக வகுக்கப்பட்ட சட்டங்கள் ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலைத்தளங்களில் உள்ள கடின சூழல்களைப் பொருத்து மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
1.கட்டுமானத் தளங்கள்
2.கப்பல் தளம்
3.எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் ஆலை
4.செமிகண்டக்டர் பிளாண்ட்
5.உலோகத் தொழிற்சாலை
மேற்கண்ட துறைகளில் உள்ள ஏறத்தாழ 7 லட்சதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொழில் தளங்களில் பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்துவது, தொழிலாளர்களுக்கு ஏற்ற பாதுகாப்பு உடமைகள், அவர்களது உடல் ஆரோக்கியம் போன்றவற்றை உறுதி செய்வது போன்றவை இதில் அடங்கும்.
FA (Factory Act) எனப்படும் தொழிற்சாலை விதிகளில் இருந்து தான் 2006 ஆம் ஆண்டு முதன் முதலில் OSH வகுக்கப்பட்டது. இதில் 18 விதிகள் FA-ல் ஏற்கனவே இருந்ததும், 7 புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டும் இதுவரை நடைமுறையில் இருந்து வந்தது. இதன்படி தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு தொழில் நிறுவங்களும் அவர்களின் பங்குகளில் இருந்து நிதியை ஒதுக்க வேண்டும். தவறும் நிறுவங்களுக்கு லட்சக்கணக்கில் அபராதமும் நிர்வாகிகளுக்கு சிறை தண்டனையும் வழங்கப்பட்டு வந்தது.
அதுமட்டுமல்லாமல் OMH- Occupational Mental Health என்ற திட்டமும் அரசால் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டம் தொழிலாளர்களின் மனநலத்தை பாதுகாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த பிப்ரவரி மாதம் இது துவங்கப்பட்டது. இது வரை 4000 தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளதாக ஸ்டீவன் சிம் குறிப்பிட்டுள்ளார். 2024 இறுதியில் ஏறத்தாழ 13000 தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் சிறந்த பயன் தரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.