தமிழக இளைஞர்கள் பலர் லட்சக்கணக்கில் ஏஜென்டிடம் பணம் கட்டி சிங்கப்பூருக்கு வருவது கை நிறைய சம்பாதித்து தன் குடும்பத்தினை நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஆசையில் தான். ஆனால் கை நிறைய பணத்தைப் பார்த்ததும் சில இளைஞர்களின் மனது தடம் புரண்டு விடுகின்றது என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
அப்படி ஒரு கதை தான் சிங்கப்பூரில் வேலைக்கு வந்த இளைஞருக்கும் நடந்தேறி இருக்கின்றது. பல கனவுகளுடன் சிங்கப்பூரில் உள்ள பிரபல கம்பெனிக்கு ஒர்க் பெர்மிட்டில் வேலைக்கு வந்தார் தென் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர். கிட்டத்தட்ட சிங்கப்பூரில் மூன்று வருட காலம் நன்றாய் பணிபுரிந்து, பணத்தை ஈட்டி தனது ஊருக்கு அனுப்பி வந்தார்.
வந்த ஒரு வருடத்திலேயே ஏஜென்டிடம் கட்டிய பணத்தினை சம்பாதித்து விட்டார் என்றே கூறலாம். இன்னும் சொல்ல போனால் தன் வேலை நேரம் போக மீதி நேரம் OT போன்றவை பார்த்து தனது சொந்த ஊருக்கு நன்றாக பணம் அனுப்பி கொண்டு இருந்தார். அவர் வாழ்க்கையில் புயல் போல நடந்தேறியது ஒரு சம்பவம்.
சிங்கப்பூரில் வாழும் பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் இவருக்கு முகநூல் மூலம் நட்பு அறிமுகமானது. முதலில் தொலைபேசியில் மட்டுமே பேசிய இவர் அந்த பெண்ணினை நேரில் சென்று பேச ஆரம்பித்தார். பின்பு மெதுவாக இந்த நட்பானது காதலாக மாறியது.
இதே சமயத்தில் அந்த நண்பருக்கு சொந்த ஊரில் திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருந்தது. பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் இவரது காதலும் மிகவும் நெருக்கமானது. இருவரும் சேர்ந்து சிங்கப்பூரில் உள்ள முக்கிய இடங்களுக்கு வார இறுதியில் உலா வருவது என்று உல்லாசமாக சுற்று ஆரம்பித்தனர்.
நண்பருக்கு திருமணம் நிச்சயிக்க ஆரம்பித்ததும் சொந்த ஊருக்கு டிக்கெட் போடப்பட்டது. இந்த விஷயம் எப்படியோ அந்த பெண்ணிற்கு தெரிந்து பிரச்சனை ஆரம்பமானது. முதலில் நியாயம் கேட்ட அந்த பெண் இவரிடம் வந்து சரியான பதில் வராததால் அவரது உறவினருக்கு போன் செய்ய ஆரம்பித்து விட்டார்.
ஆரம்பத்தில் காதல் என்று கசிந்து உருகிய பெண், அதன் பின் எனக்கு 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால்தான் நான் இந்த உண்மையை யாரிடமும் சொல்ல மாட்டேன். இல்லையென்றால் சிங்கப்பூரில் போலீசில் புகார் அளிப்பது மட்டுமல்லாமல், உங்களது சொந்த ஊருக்கு வருவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
இந்த விஷயம் நண்பரது வீட்டிற்கும் தெரியவர, தனது குடும்பத்திற்கு முன் நண்பர் தலை குனிந்து நின்று இருக்கிறார். தன் மகனின் திருமணம் நின்று போய் விடக்கூடாது என்பதற்காக நண்பர் வீட்டில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணத்தைப் புரட்டி அந்த பெண்ணின் அக்கவுண்ட்க்கு பணம் சென்ற பிறகு அந்தப் பெண் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார்.
தனது குடும்பத்தினருக்காக பல்வேறு கனவுகளை சுமந்துவரும் இளைஞர்கள், சிங்கப்பூரில் இது போன்ற அர்த்தமற்ற காதல் அனாவசியமானது என்பதை உணர வேண்டும். உங்களிடம் பணம் பறிப்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருக்குமே தவிர உண்மை காதல் இருப்பது அரிதிலும் அரிது.
எனவே நாம் எந்த நோக்கத்திற்காக அந்த நோக்கத்தை மட்டும் கைவிடாமல், கண்ணியத்துடன் நடப்பதே சிறந்தது. உங்களின் நலனில் அக்கறை கொண்ட “தமிழ் சாகா சிங்கப்பூரின்” சிறிய பதிவுதான் இது. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.