TamilSaaga

சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட்டில்.. தலையில் 3 முழம் மல்லிப்பூவுடன் அவள்! – 2 நிமிடக் கதை!

ஒருவன் ஒருநாள் இரவு, சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட்டில் தனது விமானத்துக்காக காத்துக் கொண்டிருக்க, அருகில் வந்து அமர்ந்தாள் அவள்.

கூந்தல் முழுக்க மல்லிகைப்பூ.. அந்த வாசம் இவனை சுண்டியிழுக்க, அவளை அவ்வப்போது அவளுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ஏன் இந்த இரவு நேரத்தில் இவ்வளவு மல்லிப்பூவை வைத்துக் கொண்டு இவள் ஃபிளைட் ஏற வந்திருக்கிறாள்?’ அவன் மூளை யோசித்துக் கொண்டே இருக்க, அவள் முதன் முதலாய் அவனை திரும்பிப் பார்த்தாள். பார்த்தாள்… பார்த்துக் கொண்டே இருந்தாள்.. கண்களை விலக்காமல்…

‘ஏன் இவள் என்னை இப்படி பார்க்கிறாள்?’ நான் காண்பது கனவா…? என்னையும் ஒரு பெண் இப்படி பார்க்கிறாளே!!

அவன் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவனருகில் அமர்ந்திருந்த அவள் அவனிடம்,

‘நான் அழகா இருக்கேனா?’

ரொ..ரொ.. ரொம்ப..

‘உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?’

‘இல்லை’

‘உங்களுக்கு கல்யாணம் பண்ணும் எண்ணம் உள்ளதா?’

‘இருக்கு’

‘கல்யாணம் செய்தால் பத்திரமாக பார்த்துக் கொள்வீர்களா?’

‘நிச்சயமாக’

‘வேறு பெண்ணை கனவிலும் நினைத்துக் கூட பார்க்க மாட்டீங்க தானே?’

‘சத்தியமாக’

‘அப்படியெனில், நீங்கள் எனது பாட்டியை திருமணம் செய்து கொள்வீர்களா?

‘என்ன….!?’

ஆம்… சரியாக 50 ஆண்டுகள் பின்னோக்கி ‘டைம் மெஷின்’ மூலமாக இங்கு வந்துள்ளேன். நீங்கள் தான் என் தாத்தா. என் பாட்டி தான் உங்கள் மனைவி. உங்கள் மகள் வழி பேத்தி நான். மிகப்பெரிய விஞ்ஞானியும் கூட. ஆனால்.. என் பாட்டி சொன்ன விஷயம் ஒன்று மட்டும் உண்மை.

“பொம்மைக்கு புடவைய சுத்தி வுட்டாலும், உன் தாத்தா வெறிக்க வெறிக்க பார்ப்பான்” என்று அவள் சொன்னாள். அது உண்மையா என்று சோதிக்க தான் வந்தேன். அப்புறம் இன்னொரு விஷயம்… உங்களுக்கு கல்யாணம் ஆகவில்லை என்று சொன்னது பொய். இன்றைய தேதிப்படி, உங்களுக்கு கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆச்சு. உங்கள் குழந்தை… அதாவது என் அம்மாவுக்கு வயசு இப்போ 6 மாதம். கடைசியா ஒரு விஷயம்… நான் டைம் மெஷின் மூலமா இங்க வருவதற்கு முடிவு செய்த போது, நீங்க செத்து 4 வருஷமாச்சு. மூன்று முழம் மல்லிப்பூவுல கவுந்துட்டீங்களே தாத்தா… சரி Bye.. 50 வருஷம் கழித்து சந்திப்போம்.

அவன் வியர்த்துப்போனான்… ஃபிளைட்டுக்கான அறிவிப்பு வந்தது. கூட்டம் அலைமோதியது.. அவள் எங்கேயோ போனாள்!

Related posts