இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்று மலேசியர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியாது என சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.
போதைப்பொருளுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகளைக் கொண்ட நாடுகளில் சிங்கப்பூர் முக்கியமானது. போதைப்பொருள் பயன்படுத்தினாலே, வைத்திருந்தாலோ கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். குறிப்பாக, சிங்கப்பூருக்கு வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்தது தெரியவந்தால், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படுவதுண்டு.
இதையும் படிங்க: பிழைக்க வேறு நாட்டுக்கு போனா சொந்த நாட்ட மறக்க முடியுமா? இறந்த கபடி வீரருக்கு ரூ.1 லட்சம் நிதி கொடுத்த சிங்கப்பூர் தொழிலாளர்கள்…
சிங்கப்பூருக்குள் போதைப்பொருளை கடத்தி வந்ததாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஜுமாத் முகமது சயீத் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் ராஜேந்திரன், தட்சிணாமூர்த்தி கட்டையா மற்றும் சாமிநாதன் செல்வராஜூ ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் ஜுமாத் தவிர மற்ற மூவருமே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 2015 முதல் 2018 வரை சிங்கப்பூர் நீதிமன்றம் அளித்திருந்தது. இதை எதிர்த்து இவர்கள் 2016 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் தனித்தனியாகத் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றத் தடை விதிக்க வைக்க வேண்டும் என்று இவர்கள் நால்வர் தரப்பில் சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இவர்களுக்கு ஆதரவாக எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்நீதிமன்ற தீர்ப்பு
இவர்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி Valerie Thean, கிரிமினல் வழக்குகளில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டு 3 மாத காலத்துக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்கிற நிலையில், அந்த கால இடைவெளிக்குப் பின்னர் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகத் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.
சிங்கப்பூர் அரசியல் சாசன சட்டம் பிரிவு 18 (1)-ன் படி, ஒருவரிடம் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டாலோ, அல்லது வைத்திருப்பதாக சந்தேகப்பட்டாலோ அவர் மீது வழக்குப் பதிய முடியும். அதேபோல், 18 (2)-ன் படி தன்னிடம் இருக்கும் போதைப்பொருளின் தன்மை பற்றி அந்த நபருக்குத் தெரியவில்லை என்பதை நிரூபிக்கப்படாதபட்சத்தில், அதிகபட்ச தண்டனையை வழங்க முடியும்.