SINGAPORE: Tanah Merah-ல் உள்ள ஒரு வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ந்து வந்த பூனையை மலைப்பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது.
சிங்கப்பூரின் Tanah Merah பகுதியில் வசித்து வருபவர் 28 வயதான ஆசிரியை ஏஞ்சல் லோ. இவர் ஒரு பூனையை செல்லமாக வளர்த்து வந்தார். எப்போதும் வீட்டைச் சுற்றியும், அக்கம்பக்கத்திலும் அந்த பூனை சுற்றித் திரிவது வழக்கம்.
இந்நிலையில், சம்பவத்தன்று அதாவது கடந்த திங்கள்கிழமை (ஆக.29) இரவு தனது வெளியே சென்று சுற்றித்திரிந்த பூனை வீட்டிற்குத் திரும்பாததால், ஏஞ்சல் லோ.வெளியே சென்று தேடியுள்ளார். ஆனால், செல்லப்பூனை கிடைக்கவில்லை.
இதையடுத்து, அந்த பகுதியில் மலைப்பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு படுத்துக் கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர், அதனை வீடியோவாக எடுத்து சமூக தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவை ஏஞ்சல் லோ.குடும்பத்தினரும் பார்த்துள்ளனர். அதில், அந்த மலைப்பாம்பின் வயிற்றுப் பகுதி உப்பிப் போய் இருப்பதை பார்த்த ஏஞ்சல் லோ, Animal Concerns Research and Education Societyயை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளார்.
விரைந்து வந்த அதிகாரிகள் பாம்பை பத்திரமாக மீட்டு, சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவுக்கு கொண்டுச் சென்றுள்ளனர். மறுநாள், அந்த மலைப்பாம்பு சரியாக செரிக்காத அந்த பூனையின் உடலை கக்கியுள்ளது. அதன் பிறகே, 6 கிலோ எடையுள்ள தங்கள் செல்ல பூனையை மலைப்பாம்பு விழுங்கியது அந்த குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.
Tanah Merah பகுதியில், மூன்று மாடி வீட்டில் வசிக்கும் திருமதி லோவும் அவரது குடும்பத்தினரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடிபெயர்ந்ததில் இருந்து அந்த பகுதியில் பாம்பை பார்த்தது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளனர்.
சிங்கப்பூரின் நகர்ப்புறங்களில் உள்ள வடிகால்களில் “ரெட்டிகுலேட்டட்” மலைப்பாம்புகள் தொடர்ந்து காணப்படுகின்றன என்றும் எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்று சிங்கப்பூர் ஹெர்பெட்டாலஜிக்கல் சொசைட்டியின் தலைவர் திரு சங்கர் அனந்தநாராயணன் கூறியுள்ளார்.