TamilSaaga

குற்றவாளிகளை அலற விடும் சிங்கப்பூரின் கிரிமினல் லாயர் ‘துரை சிங்கத்துக்கு’ 4000 டாலர் அபராதம் – சிங்கையின் ‘gag order’-ஐ மீறினால்… யாராக இருந்தாலும் தண்டனை!

SINGAPORE: சிங்கப்பூரின் மூத்த கிரிமினல் வக்கீல் யூகின் துரைசிங்கம் பற்றி மிக சிலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், பலருக்கு இவரப்பற்றி தெரிய வாய்ப்பில்லை. சிங்கையின் ஆளுமை மிக்க கிரிமினல் லாயர்களில் மிக முக்கியமானவர் இவர். அப்படிப்பட்ட ஆளுமையான துரைசிங்கத்துக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள அபராதம் என்பது, யாராக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற சிங்கையின் கர்ஜனை முகத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

இவர் செய்த தவறு என்ன? எதற்காக இவருக்கு இந்த அபராதம் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு, சிங்கப்பூரின் GAG ஆர்டர் என்றால் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். அப்போது தான், இந்த செய்தி உங்களுக்கு புரியும்.

அதென்ன GAG ஆர்டர்?

சிங்கப்பூரில் தினமும் உள்ளூர் செய்திகளை வாசிக்கும் பழக்கத்தை உள்ளவர் என்றால் நிச்சயம் GAG ஆர்டர் பற்றி படித்திருப்பீர்கள். “இந்த வழக்கில் GAG ஆர்டர் காரணமாக அந்த பாதிக்கப்பட்டவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை”, “இந்த வழக்கில் GAG உத்தரவு காரணமாக அந்த குற்றவாளியின் பெயர் வெளியிடப்படவில்லை”, என்று பல செய்திகளை படித்திருப்பீர்கள்.

GAG ஆர்டர் என்பது நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சாட்சிகள் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைப் பாதுகாக்க நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஒரு உத்தரவு. பெரும்பாலும், பாதிக்கப்படக்கூடிய நபர்கள் சிறார்களாக அல்லது பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும்போது இந்த GAG ஆர்டர் பிறப்பிக்கப்படுகிறது. சுருங்கச்சொன்னால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை பாதுகாப்பதே இந்த GAGன் நோக்கம்.

உதாரணமாக கடந்த 2019ம் ஆண்டு சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட மிக கொடூரமான வழக்குகளில் ஒன்று தான் The Chin Swee சாலை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நடந்த கொலை சம்பவம். குறிப்பிட்ட அந்த குடியிருப்பில் ஒரு பானைக்குள் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன ஒரு, 2 வயது குழந்தையின் எலும்புகள் கண்டுபிக்கப்பட்டன. அந்த வழக்கில் கூட அந்த குழந்தையை இரக்கமின்றி கொன்ற அந்த பெற்றோரின் பெயர்கள் இறந்த அந்த குழந்தையின் அடையாளத்தை பாதுகாக்கும்பொருட்டு வெளியிடப்பவில்லை.

சில தினங்களுக்கு முன்பு 47 வயதான Neo என்ற சிங்கப்பூரர், 11 வயது சிறுவனுக்கு பொது இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பிரம்படியும் விதித்தது சிங்கப்பூர் அரசு. ஆனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனின் பெயர் GAG ஆர்டர் மூலம் பாதுகாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் பெயர் பாதுகாக்கப்பட்டும் குற்றவாளியின் அடையாளம் வெளியிடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

மேலும் படிக்க – சிங்கப்பூருக்கு நம்பி அனுப்பும் பெற்றோர்.. பணத்தை வீணடிக்காமல் இருக்க “Best Choice” – S Pass, E Passஐ விட சிறந்தது Skilled Test

ஆகையால் சிங்கப்பூரை பொறுத்தவரை வழக்கிற்கு தகுந்தாற்போல குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் GAG ஆர்டர் மூலம் பாதுகாக்கப்படுகிறது. சரி இந்த ஆர்டர் கொலை, கொள்ளை போன்ற கிரிமினல் குற்றங்களுக்கு மட்டும்தானா என்று கேட்டால், நிச்சயம் இல்லை என்று தான் கூறவேண்டும்.

சிவில் வழக்குகளிலும் காக் ஆர்டர்கள் வழங்கப்படலாம், உதாரணமாக விவாகரத்து போன்ற நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் அனைத்து வகை குடும்ப வழக்குகளிலும், சம்பந்தப்பட்ட நபர்களின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக காக் ஆர்டர்கள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் ரகசியங்களை பாதுகாக்கவும் GAG ஆர்டர்

சிங்கப்பூரின் சில இரகசியச் சட்டங்கள் மீறப்பட்ட வழக்குகளில் கூட மாநிலத்தின் இரகசியங்களைப் பாதுகாக்க கேக் ஆர்டர் பயன்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரின் பாதுகாப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ரகசிய Blue Printகள் மற்றும் பல ரகசிய ஆவணங்கள் குறித்து மேற்கொள்ளப்படும் வழக்கில், பொதுமக்களும், ஊடகங்களும் படங்களோ அல்லது வழக்கு சம்மந்தமான நகல்களையோ வெளியிடுவதைத் தடுக்க நீதிமன்றம் GAG ஆர்டர் ஒன்றை பிறப்பிக்கலாம்.

எத்தனை நாட்கள் ஒரு GAG ஆர்டர் செல்லுபடியாகும்?

பொதுவாக, கேக் ஆர்டர்கள் காலவரையின்றி நீடிக்கும் என்பது தான் உண்மை, நீதிமன்றமே தலையிட்டு குறிப்பிட்ட அந்த வழக்கில் தகவல்களை வெளியிடும் வரை இந்த GAG ஆர்டர் நடப்பில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

GAG ஆர்டர் மீறப்பட்டால் என்ன நடக்கும்?

GAG ஆர்டர் பிறப்பிக்கப்பட்டுவிட்டது, ஆனால் மாநில நீதிமன்றங்கள் வழங்கிய அந்த கேக் உத்தரவை எதோ ஒரு வகையில் நீங்கள் மீறினால் (எடுத்துக்காட்டாக, ஒரு சாட்சியின் புகைப்படத்தை Facebookல் அல்லது பிற சமூக வலைத்தளத்தில் வெளியிட்டால்) உங்களுக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம், எனவே கொஞ்சம் கவனமாகவே இருங்கள். மறுபுறம், சிங்கப்பூரின் உயர் நீதிமன்றம் அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட Gag ஆர்டர் மீறப்பட்டால், உங்களுக்கு $5,000 வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இது சிங்கப்பூரின் மிகச்சிறந்த ஆயுதமாவது ஏன்?

உலக அளவில் உள்ள நாடுகளை போலத்தான் சிங்கப்பூர் அரசியலமைப்பில் உள்ள சட்டங்களில் GAG ஆர்டர் விதியும் ஒன்று. ஆனால் இது ஏன் நமது மிகசிறந்த ஆயுதமாகிறது?

சட்டம் என்பது என்ன? குற்றவாளிகளை தண்டிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு நிரபராதிகளும் வழக்கில் சிக்கிய அப்பாவிகளும் காப்பாற்றப்படுவது அதைவிட முக்கியம். இந்நிலையில் குறிப்பிட்ட அந்த விஷயத்திற்கு GAG ஆர்டர் சிறந்த முறையில் பயன்படுகிறது. குற்றவாளிகள் சட்ட ரீதியாக கடுமையாக தண்டிக்கப்படும் அதே நேரத்தில், அந்த வழக்கில் சிக்கிய இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர், தாய்மார்கள் மற்றும் இளைஞர்கள் என்று அனைவரின் அடையாளமும் பாதுகாக்கப்படுகிறது. அவர்கள் அந்த துன்பத்தில் இருந்து மீண்டும் சமூகத்தில் கலக்கும்போது “என்னை இந்த சமுதாயம் எப்படி பார்க்கும்” என்ற அச்சம் துளிகூட இல்லாமல் அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியும்.

ஆகவே சிங்கப்பூர் அரசியலமைப்பில் GAG ஆர்டர் உண்மையில் பெரும் பங்கை வகித்து வருகின்றது என்று தான் கூறவேண்டும்.

மேற்குறிய தரவுகள் அனைத்தும் பலதரப்பு அரசாங்க தரவுகளை ஒப்பிட்டுப்பார்த்தே அளிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்போது நீங்கள் ஓரளவுக்கு, கிரிமினல் லாயர் துரைசிங்கம் என்ன தவறு செய்திருப்பார் என்பதை யூகித்திருக்க முடியும்.

ஆம்! சிங்கப்பூரில் ஒரு மருத்துவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் ஒன்றை பெண் ஒருவர் கொடுத்திருந்தார். அது தொடர்பான வழக்கை துரைசிங்கம் மற்றும் அவருடைய ஜுனியர்கள் தான் கவனித்து வந்தனர். இந்த சூழலில், புகார் கொடுத்த பெண் பற்றிய விவரங்களை சிங்கப்பூரில் உள்ள மீடியாக்களுக்கு கொடுக்க முடிவெடுத்த துரைசிங்கம், தன்னை தனது உதவியாளர் மூலம் கொடுக்கவும் சொல்லியிருக்கிறார். இந்த குற்றத்துக்காக தான் அவ்வளவு பெரிய வக்கீலான துரைசிங்கத்துக்கே 4000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பதே எப்போதும் சிங்கப்பூரின் அடையாளம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts