புவி வெப்பமயமாவதை தடுக்க உலக நாடுகள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றன, அந்த வகையில் அண்டை நாடான இந்தியாவின் தலைநகர் டெல்லி Net Zero Carbon Emission, அதாவது கார்பன் வெளியேற்றம் இல்லாத, சுற்றுப்புறத்துக்கு மிகவும் உகந்த வகையில் மாற முடிவெடுத்துள்ளது.
அதற்கு முதல் படியாக டெல்லி விமான நிலையம் தற்போது முழுமையாக பசுமை எரிசக்திக்கு மாறியுள்ளது. டெல்லி விமான நிலையம் கடந்த ஜூன் 1 முதல் தனது அனைத்து எரிசக்தி தேவைகளுக்கும் ஹைட்ரோ மற்றும் சோலார் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றது.
இதன் மூலம், விமான நிலையம் முழுவதுமாக ஹைட்ரோ மற்றும் சோலார் மின்சாரத்தில் இயங்கும் இந்தியாவின் முதல் விமான நிலையம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது டெல்லி விமான நிலையம். மேலும் 2030ம் ஆண்டுக்குள் Net Zero Carbon Emission கொண்ட விமான நிலையமாக மாறும் தனது லட்சிய இலக்கை அடைவதற்கு தொடர்ந்து உழைத்து வருகின்றது.
இந்த விமான நிலையத்தின் மின்சாரத் தேவையில் தோராயமாக 6 சதவிகிதம் அங்குள்ள சூரிய மின் நிலையங்களில் இருந்து பெரும் ஆற்றலால் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த சூரிய மின் ஆற்றல் ஆலைகள் இந்திரா காந்தி சர்வதேச (IGI) விமான நிலையத்தின் ஏர்சைடு மற்றும் கார்கோ டெர்மினல்களின் கூரைகளில் உள்ளன.
பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலை குறைக்க இந்திய அரசு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில், 2030ம் ஆண்டுக்குள் டெல்லி ‘விமானநிலையங்களில் ஜூரோ கார்பன் வெளியீடு’ என்ற இலக்கை அடையும் நோக்கத்தின் ஒரு பகுதியே இந்த முன்னெடுப்பு.
சரி டெல்லியின் இந்த முடிவுக்கு கடந்த 2008ம் ஆண்டு வித்திட்டதும், தற்போது டெல்லி விமான நிலையத்தில் Net Zero Carbon Emission துவங்க காரணமாக இருந்ததும் யார் தெரியுமா?. அது நம்ம சிங்கப்பூரில் இயங்கி வரும் yongnam holdings என்ற நிறுவனம் தான்.
கடந்த மார்ச் 11, 2008ம் ஆண்டு சிங்கப்பூரின் யோங்னம் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம் S$70 மில்லியன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இந்நிறுவனம் கையெழுத்திட்ட முதல் பெரிய ப்ராஜெக்ட் இதுதான். அது தான் டெல்லி விமான நிலைய பயணிகள் முனைய கட்டிடத்திற்கான கூரை கட்டமைப்பு, எஃகு வேலைப்பாடு மற்றும் விமான நிலைய விரிவாக்கத்தின் கீழ், புதிய முனையம் 3ல் உள்ள முன்தளம் உருவாகும் பணி உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய புதிய ப்ராஜெக்ட்.
அதே போல தற்போது நடைபெற்று வரும் Net Zero Carbon Emission திட்டத்தை கூட சிங்கப்பூரின் இந்த நிறுவனம் தான் செயல்படுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தலைநகருகே முன்னோடியாக நமது சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று திகழ்கின்றது என்பது உண்மையில் சிங்கப்பூரர்கள் பெருமைகொள்ளவேண்டிய விஷயம்.