“பறக்கும் திமிங்கலம்” என்று அழைக்கப்படும் ஒரு வகை சிறப்பு Transporting விமானம் தான் Airbus நிறுவனத்தின் Beluga வகை விமானம். இந்நிலையில் தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக இந்த விமானம் சில தினங்களுக்கு முன்பு எரிபொருள் நிரப்ப சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்துள்ளது.
Air Bus A300-608ST (சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர்) ‘பெலுகா’ என்று அறியப்படும் இந்த தனித்துவமான விமானம் கடந்த திங்கள்கிழமை அதிகாலை சென்னையை வந்தடைந்தது. கடந்த ஜூலை 7 அன்று பிரான்சின் துலூஸில் தொடங்கிய இதன் பயணம், பின்னர் மார்சேய், கெய்ரோ, அபுதாபி மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு சென்றது.
தனது நீண்ட தூர பயணத்தில் இந்த விமானம் சென்னையில் இருந்து அடுத்தபடியாக நமது சிங்கப்பூர் வரவிருந்ததாகவும் கூறப்படுகிறது. விமானிகள் ஓய்வெடுக்கவும், எரிபொருள் நிரப்பவும் மட்டுமே சென்னையில் தரையிறக்கப்பட்டுள்ளது Beluga.
ஆர்க்டிக் பகுதிகளில் காணப்படும் Beluga வகை திமிலங்களின் உடல் அமைப்பை இந்த விமானம் கொண்டுள்ளதால் இதற்கு அவ்வாறு பெயர் சூட்டப்பட்டுள்ளது. குட்டி விமானம், ஹெலிகாப்டர் துவங்கி ராட்சச பொருட்கள் வரை கொண்டு செல்லும் திறன்கொண்டது தான் Beluga.
இதன் மொத்த நீளம் 56.16 மீ, உயரம் 17.25 மீ மற்றும் ஃபியூஸ்லேஜ் அகலம் 7.7 மீ, இரட்டை எஞ்சின் கொண்ட இந்த டிரான்ஸ்போர்ட்டரின் அதிகபட்ச சுமந்து செல்லும் திறன் சுமார் 52 டன்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தாய்லாந்து செல்லும்போது இந்த விமானம் இந்தியா வழியாக பறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.