சிங்கப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) செராங்கூன் சாலையில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் (CNB) எடுத்த அமலாக்க நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்திய குற்றங்களுக்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான அந்த நான்கு பேரும் 61 முதல் 67 வயதுக்கு உள்பட்ட முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமலாக்க நடவடிக்கையின்போது 735 கிராம் ஹெராயின் மற்றும் 254 கிராம் ICE எனப்படும் Methamphetamine போதைப்பொருள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் S$90,000 இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக CNB இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் கைது செய்யப்பட்ட 61 வயது நபரிடம் சுமார் 245 கிராம் ICE மற்றும் 3,400 சிங்கப்பூர் டாலர்கள் இருந்ததாக CNB தெரிவித்துள்ளது.
அதே பகுதியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், உணவு பொட்டலத்தில் ஹெராயின் மூட்டையை மறைத்து வைத்திருந்த 67 வயதுடைய நபரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 521 கிராம் ஹெராயின், 3 கிராம் ICE மற்றும் 1,500 சிங்கப்பூர் டாலர்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கு சம்மந்தமாக அதே பகுதியில் வசித்துவந்த 65 வயது சிங்கப்பூர் ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாகவும் CNB கூறியது.
அந்த இருவரும் பின்னர் ஒரு தனியார் குடியிருப்பில் உள்ள அவர்களின் மறைவிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அதிகாரிகள் 214 கிராம் ஹெராயின், 6 கிராம் ICE மற்றும் பல்வேறு போதைப்பொருள் சாதனங்களைக் கண்டுபிடித்தனர்.
அந்த இருவரிடமும் இருந்து S$12,000க்கும் அதிகமான பணமும் மீட்கப்பட்டதாக CNB தெரிவித்துள்ளது. நான்கு பேரின் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
மொத்தமாக இந்த அமலாக்க நடவடிக்கையின் போது 735 கிராம் ஹெராயின், 254 கிராம் ICE கைப்பற்றப்பட்டது.
சிங்கப்பூரை பொறுத்தவரை 15 கிராமுக்கு மேல் சுத்தமான ஹெராயின் (diamorphine) அல்லது 250 கிராம் methamphetamine கடத்தியது நிரூபணமானால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.