சிங்கப்பூரில் இன்று ஏப்ரல் 23 மதியம், துவாஸ் பகுதியில் பெரிய வெடிச் சத்தம் ஒன்று கேட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த பகுதியில் அடர்ந்த புகையுடன் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
31 பெனாய் லேனில் இருந்து மாலை 4.45 மணியளவில் தீ விபத்து குறித்து எச்சரிக்கப்பட்டதாக SCDF தனது பேஸ்புக்கில் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த SCDF தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க மூன்று நுரை ஜெட்கள் மற்றும் இரண்டு நீர் ஜெட்களை பயன்படுத்தியுள்ளனர்.
“எண்ணெய் மற்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய பொருட்களை” வழங்கும் OCS எனப்படும் நிறுவனம் தான் 31 பெனாய் லேனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 61ல் வசிக்கும் பிரையன் லோ அளித்த தகவலின்படி, தனது படுக்கையறை ஜன்னலில் இருந்து மாலை 5.10 மணியளவில் ஒரு பெரிய புகை முட்டத்தை கண்டதாகக் கூறினார்.
அதே போல மாலை 6 மணியளவில் அவர் மிகப்பெரிய வெடிச்சத்தம் ஒன்றை கேட்டதாகவும் அவர் கூறினார். உடனடியாக 16வது மாடிக்கு சென்று அவர் பார்த்தபோது தூரத்தில் கரும்புகை வானில் நிரம்பியிருப்பதை கண்டுள்ளார்.