வாழக்கையில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று தான் நமது முதல் நாள் வேலை. எவ்வளவு குறைத்த சம்பளமாக இருந்தாலும் நமது முதல் வேலையை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம்மால் மறக்க முடியாது. ஆனால் ஒரு 18 வயது இளைஞருக்கு தனது முதல் நாள் வேலையையே அவரது வாழ்வில் இறுதி நாளாக மாறியுள்ளது.
மலேசியாவில் 18 வயது இளைஞன் ஒருவர் கடந்த ஏப்ரல் 11ம் தேதி லிஃப்டில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் மார்க்கெட் ஊழியரான அவர் வேலைக்குச் சென்ற முதல் நாளிலேயே உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஆண்ட்ரூ முண்டிங் குலிங் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர், சம்பவத்தின்போது சரவாக்கின் பிந்துலுவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பெட்டிகளை எடுத்துச்செல்லும் வேலையில் ஈடுபட்டிருந்தார். இறந்த அந்த இளைஞர் மற்றும் மற்றொரு நபர் லிப்ட்டில் இருந்து பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் லிப்ட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த சக ஊழியரிடம் கடைசியாக சரக்கு பெட்டியை அவர் நகர்த்த முயன்றபோது லிஃப்ட் திடீரென சரிந்தது. அவரது சக ஊழியர் லிப்ட் கீழே விழுந்ததை பார்த்து ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தவித்துள்ளார்.
மூன்றாவது மாடியில் கீழே விழுந்த நிலையில் அவரது கழுத்தில் எலும்பில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மீட்பு குழிவினார் வந்து அவரை மீட்டு பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
தாய், தந்தை, 23 வயது அக்கா மற்றும் 20 வயது அண்ணன் ஆகியோரை அந்த 18 வயது இளம் தொழிலாளி விட்டு பிரிந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அவர் இறந்த பிறகு நடந்த பிரேத பரிசோதனையில் அவருக்கு பெருந்தொற்று இருப்பது உறுதியானதால், குடும்பத்தினரால் அவரது உடலைக் கூட மீட்டெடுக்க முடியவில்லை என்பது தான் கொடூரத்தின் உச்சம்.
வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியும் தனது குடும்பத்திற்காக அடம்பிடித்து வேலை சென்றான் எனது இளைய மகன் என்று அந்த தாய் கதறியது காண்போரை கண்கலங்க வைத்தது. அவர் இறப்பதற்கு முன் காலை 6.30 மணிக்கு தனது மகனுக்கு காலை உணவை தயாரித்து கொடுத்துவிட்டு, நான் தான் அவனை வேலைக்கு அழைத்துச் சென்றேன் என்றும் அந்த தாய் கூறினார்.