இந்த டிஜிட்டல் உலகில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவது என்பது வெகு சுலபம். காரணம் தினமும் நாம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களின் அளவு அவ்வளவு அதிகம். FB, Twitter தொடங்கி இன்ஸ்டாகிராம் மற்றும் youtube வரை எந்த தலத்தில் வேண்டுமானாலும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மக்களின் ஆதரவை பெறலாம். இந்த சமூக ஊடகத்தால் போன் திரையில் இருந்து வெள்ளித்திரைவரை சென்றவர்களும் இங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அதே நேரத்தில் தங்களின் விபரீதமான சில செய்கைகளை இணையத்தில் வெளியிட்டு லைக்ஸ்களை குவிக்க ஆசைப்படும் மக்கள் இங்கு அதிகம் உண்டு. ஆனால் இணையத்தில் பிரபலமானாக சில சமயங்களில் அவர்கள் செய்யும் சாகசங்கள் விபரீதத்தில் கொண்டு சேர்க்கிறது. அந்த வகையில் அண்டை நாடான இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தை சேர்த்த இளைஞர் ஒருவர் செய்த சாகசம் இப்பொது அவரை மருத்துவமனையில் கிடத்தியுள்ளது.
Mass Syed என்ற அந்த கர்நாடக இளைஞர் அடர்ந்து காட்டுப்பகுதி ஒன்றில் மூன்று நாகப்பாம்புகளோடு சாகசம் செய்யும் காட்சிகளை படமாக்கி வந்துள்ளார். பாம்பு பிடிக்கும் நபரான மாஸ் சையத் நாகப்பாம்புகள் முன் அமர்ந்துகொண்டு தனது கைகளையும் கால்களையும் ஆட்டி அந்த பாம்புகளிடம் விளையாடிக்கொண்டிருந்தபோது அவருடைய ஒரு தீடீர் அசைவால் சீற்றம்கொண்ட ஒரு பாம்பு பட்டென்று அவர் முட்டியில் கொத்தியது. அவர் எழுத்து நின்று கால்களை உதறிய பின்னும்கூட அந்த பாம்பு அவரை கடிப்பதை நிறுத்தவில்லை.
அந்த இளைஞர் மேற்கொண்ட விபரீத நடவடிக்கையின் காணொளி இதோ..
இந்நிலையில் இந்திய வனத்துறையை சேர்ந்த சுஷந்தா நந்தா என்ற அதிகாரி இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இது நாகப்பாம்புகளை கையாளும் பயங்கரமான வழி. தயவுசெய்து யாரும் இதை செய்ய முற்படவேண்டாம் என்று கூறியுள்ளார். பாம்புகளை குறிப்பாக விஷப்பாம்புகளை கையாளுவது எளிதான காரணமல்ல என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அந்த வாலிபர் சையத் தற்போது மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.