அண்டை நாடான இந்தியாவில் உள்ள தமிழகத்தில், கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி அம்மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார் மு.க. ஸ்டாலின் அவர்கள். அன்று முதல் இன்று வரை அவருடைய செயல்திறன் குறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக உள்ள மிஸ்கின் அவர்கள் ஸ்டாலினின் பிறந்தநாளன்று அவரை கண்டு வாழ்த்துக்களை சொல்ல விரும்பியுள்ளார். அவரது ஆசை எப்படி ஈடேறியது, முதல்வரை சந்தித்தபோது நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மிஸ்கின்.
அவர் வெளியிட்ட அந்த பதிவில் ‘பிறந்தநாளன்று முதல்வருக்குப் பூங்கொத்து குடுக்க முடியுமா?’ என்று சகோதரி கிருத்திகா உதயநிதியிடம் கேட்டேன். பத்து நிமிடங்களுக்குள் மூன்று பேர்கள் என்னை அழைத்தார்கள். ‘ஐயா இன்று முழுவதும் அலுவல்களில் இருக்கிறார், நாளை மதியம் சந்திக்கிறீங்களா?’ எனக் கேட்டார்கள். ‘அவரை தொந்தரவு செய்ய வேண்டாம். ஒரு வாரத்திற்குப் பிறகு எனக்கு இரண்டு நிமிடங்களை ஒதுக்கி தாருங்கள்’ எனக் கேட்டுகொண்டேன்.