சிங்கப்பூரில் உள்ள ஒரு வெளிநாட்டுத் தொழிலாளி கடந்த பிப்ரவரி 14 அன்று லிட்டில் இந்தியாவில் தனது பணப்பையை தவறவிட்டுள்ளார். மேலும் அதைக் உடனைடியாக கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கேட்க எண்ணி அதை முகநூல் பக்கத்தில் பதிவிட நினைத்துள்ளார். ஹபீப் கான் என்ற அந்த தொழிலாளி, கடந்த பிப்ரவரி 14 அன்று முஸ்தபா சென்டரில் இருந்து லிட்டில் இந்தியா செல்லும் வழியில் மதியம் 2:30 மணியளவில் தனது பணப்பையை தொலைத்துவிட்டதாக ஒரு பதிவை முகநூலில் வெளியிட்டுள்ளார்.
அவரது பணப்பையில் S$1,000க்கும் அதிகமான தொகை, அவரது வங்கி அட்டை, வேலை அனுமதி அட்டை மற்றும் பிற தனிப்பட்ட ஆவணங்கள் இருந்தன என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவின் வழியாக அவரது பொருள் மீண்டும் கிடைப்பது கடினம் என்று நினைத்து சோகத்துடன் முகநூலில் பகிர்ந்த அவருக்கு இன்ப அதிர்ச்சியாக அவருடைய அந்த பதிவு பலநூறு முறை பகிரப்பட்டது. இறுதியில் அவருடைய நம்பிக்கைக்கு கிடைத்த பரிசாக சுமார் 6 மணி நேரம் கழித்து “சகோதரா உங்களது wallet கிடைத்துவிட்டது, உடனே என்னை தொடர்புகொள்ளுங்கள்” என்ற கமெண்ட் வந்தது. அந்த கமெண்ட் செய்ததும் ஒரு வெளிநாட்டு ஊழியர் தான்.
மகிழ்ச்சி கடலில் மூழ்கிய அவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு, தனது பணப்பையை மீண்டும் பெற்றுவிட்டதாகவும் அதில் எல்லாமே இருப்பதாகவும் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அவர் எழுதிய அந்த நன்றி பதிவில் “அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் அளவற்ற கருணையால் எனது பணப்பையை நான் கண்டுபிடித்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார். தனது “பணப்பையை என்னிடம் திருப்பிக் கொடுத்தவர் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு நல்ல மனிதர் மற்றும் பெரிய இதயம் படைத்தவர். அவருக்கு நன்றிகள் பல,” என்று அவர் மேலும் கூறினார்.
ஹபீப் தனது பதிவில், பிப்ரவரி 15 அன்று தனது பணப்பையை திரும்பக் கொண்டு வந்த அந்த நல்ல மனிதரின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டு மகிழ்ந்துள்ளனர். “எல்லோரும் எனக்கு இந்த அளவிற்கு உதவி செய்வார்கள் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. நேர்மையான வழியில் சம்பாதித்த பணம் ஒருபோதும் நம்மைவிட்டு போகாது என்பதை இன்று நான் உணர்கிறேன் என்றார் அவர்.